Tuesday, December 14, 2010

முதல் ஓட்டு அனுபவம்

நான் என்னுடய முதல் ஓட்டு பதிவை நினைவு கூர்ந்து பார்க்கிறேன்.

என் தந்தை என் பாட்டியிடம்: ”நாங்க எல்லாரும் ஓட்டு போட்டாச்சு நீயும் ஆனந்தும் போய் ஓட்டு போட்டுட்டு வாங்க. ஹெச்.வி. ஹாண்டேக்கு ஓட்டு போடும்மா அவர் நல்லவர் அதுவும் அவர் ஒரு ப்ராமணர் செரியா?”
உடனே என் பாட்டி : ”யாருடா அது ஹாண்டெ?”

என் தந்தை: ”அவர்தாம்மா போன வாரம் வந்து நம்ப தெருவிலே ஓட்டு கேட்டாரே நம்ப ஆத்து வாசல்ல நின்னு கண்டிப்பா எனக்கு ஓட்டு போடுங்கோன்னு கேட்டாரே ஞாபகம் இருக்கா?”

என் பாட்டி: ”என்னமோ போடா எனக்கு சரிபடலே”

என் தந்தை: ”அம்மா உனக்கு புரியாது பேசாம போ ஹெச்.வி. ஹாண்டேக்கு ஓட்டு போடு.” (என் பாட்டியிடம்) “அம்மா! தேர்தல் சீட்டுல பேரு தேட கஷ்டமா இருக்கும் அதனால சேவல் சின்னத்த பார்த்து ஓட்டு போடு” (என்னை பார்த்து) ”டேய் ஆனந்த் பாட்டி கூட போய் ஓட்டு போடு”.

என் பாட்டி: ”நன்னா இருக்கு நீ சொல்லரது – சேவலும் வேண்டாம் கோழியும் வேண்டாம் நான் போய் சூரியன்ல ஓட்டு போட்டுட்டு வரேன். நீ வாடா ஆனந்த் நம்போ ரெண்டு பேரும் போய் ஓட்டு போட்டுட்டு வரலாம்”

நானும் ஏதோ பிரமை பிடித்தவன் போல என் பாட்டி கூடவே போய் ஓட்டு போட்டேன்.
என் பாட்டிக்கு 80 வயதுக்கு மேலிருக்கும் அப்போது (கிட்டத்தட்ட 23 வருடங்களுக்கு முன்னால்). இப்படித்தான் இந்தியர்களில் பெரும்பாலோர் ஏன், எதற்கு, யாருக்கு என்று தெரியாமலே, யோசிக்காமலே வாக்களிக்கிறார்கள்.

என் பாட்டி சொன்னதால் சூரியனுக்கு வாக்களித்த அந்த முதல் வாக்குக்கு பிறகு, இன்றுவரை நான் என் வாக்குரிமையை பயன்படுத்தவில்லை. இதில் பெரும்பாலும் வெளிநாட்டில் இருந்தது என்பது, பல காரணங்களில் ஒரு காரணம்.

ஆனந்த்
April 2009

No comments:

Post a Comment