Wednesday, April 6, 2011

ஹங்கேரியில் ஒரு அக்ரஹாரம்


அழகான மணல் மேட்டில் அமைந்த ஒரு தெரு அதில் மிக அழகான ஓட்டு வீடுகள் எனக்கு பெரிய ஆச்சர்யம் நாம் ஐரோப்பாவில் இருக்கிறோமா அல்லது தமிழ் நாட்டில் இருக்கிறோமா?

2008 ல் என் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் நான் ஐரோப்பா சுற்றுபயணம் செய்தேன். நாங்கள் Paris, London, Manchester, Barcelona, Rome, Venice, Lucern என்று பல மேற்கு ஐரோப்பிய நகரங்களை சுற்றி பார்த்தோம்.

இந்த வருடம் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லலாம் என்று எனக்கு ஒரு ஆசை.

நாங்கள் வந்திருப்பது ஹங்கேரி நாட்டின் தலை நகரம் புடபெஸ்ட். Map இன் உதவி இருந்தாலும் வழி தேடி சென்றுகொண்டிருந்த நாங்கள் நால்வரும் எங்களையும் அறியாமல் இந்த மணல் மேட்டிற்கு வந்து இந்த அழகான தெருவில் நிற்கின்றோம்.

எல்லா வீடுகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி அமைந்துள்ள ஓட்டு வீடுகள். வாசலிலே பெரிய திண்ணை ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அழகான மாக்கோலம்.

எங்கும் நம் மக்கள்.

புடவை உடுத்திய அழகான (ஹ்ம்ம்ம்ம்) மாமிகள். வேஷ்டி உடுத்தி நெற்றியிலே பட்டை நாமம் போட்ட கட்டழகு மாமாக்கள்.

திண்ணையிலும், வீதியிலும் குஷியாகத் தாவி விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள்.

நாங்கள் நால்வரும் ஆச்சர்யத்துடன் நடந்து செல்ல நான் என் பாட்டியை பார்க்கிறேன். என் அம்மாவின் அம்மா இந்த பாட்டி.

நான் ”ஹங்கேரியில் எப்படி நம் பாட்டி” என்ற ஆச்சரியத்தை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு “என்ன பாட்டி எப்படி இருக்கே” என்றேன்.

“நான் நன்னா இருக்கேன் நீங்கள் எல்லாரும் சௌகியம்தானே”

“நாங்க நன்னா இருக்கோம் நீ எப்போ இந்த ஊருக்கு வந்தே”

பதில் சொல்லாமல், என் பாட்டி யாரையோ தேடினாள். பிறகு என்னை பார்த்து “செல்லப்பா, ராமு எல்லாரும் ஒண்ணா பொரப்டு வந்தோம். இந்த ஊர் பெருமாள் கோவில் உத்சவம் கொடி ஏறி மூணு நாள் ஆறது” என்று சொல்லிக்கொண்டே வலது பக்கம் திரும்பி “டேய் செல்லப்பா செத்த இங்க வா நம்ப ஆனந்து, ஹேமா, பசங்கல்லாம் வந்திருக்கா பாரு”.

நான் அசந்து போனேன். என் இரண்டு மாமாக்கள், என் பாட்டி எல்லோரும் இங்கே ஹங்கேரி நாட்டில் ஒரு அக்ரஹாரத்தில் என் முன்னே – இது என்ன கனவா?

“பாட்டி மெட்ராஸ் லேந்து எப்டி வந்திங்கோ எல்லாரும்”

“இதென்ன அசட்டு கேள்வி நாங்க எல்லாரும் பறக்கற வண்டில தான் வந்தோம். மெட்ராஸ்லேர்ந்து பொரப்டு டில்லி வந்தோம். அங்க வேற வண்டியில ஏறி எதோ ஒரு ஊர் வழியா இந்த ஊருக்கு வந்தோம்”

நான் இருபது வருடங்களாக பறந்த அனுபவத் திமிருடன் என் பாட்டியிடம் “டில்லிலேந்து நேரா இங்க வந்தியா இல்ல வேற ஊர் வழியாவா?”

என் பாட்டி என் இரண்டாவது மாமாவை பார்த்து “ஏன்டா ராமு நம்போ டில்லிலேந்து அந்த மசக்க ஊர் வழியாதானே வந்தோம்”

என் மாமா உடனே “அம்மா அது மசக்க இல்ல அந்த ஊர் பேரு மொஸ்கொவ்” என்றான்.

”இருடா காபி போட்டுண்டு வரேன்” “ராமு பால் வாய்ண்டு வா” என்று அவர்கள் சற்று நகர்ந்து செல்ல, நான் கொஞ்சம் காலாற நடக்கலாம் என்று நகர்ந்தேன்.

நான் என் மனைவியை பார்த்து “மெட்ராஸ் டு புடபெஸ்ட் அட்லீஸ்ட் ஒரு 40,000 rupees இருக்குமா Airfare” என்றேன்.

As usual “நமக்கு ஏன் அந்த கவலை” என்றாள்.

நான் யோசித்தேன் – இவர்கள் அத்தனை பேரும் சென்னயில் இருந்து எவ்வளவு தூரம் பயணம் செய்து இங்கே வந்திருகிறார்கள். என்ன ஆச்சர்யம்.

கிட்டத்தட்ட நூறு குடும்பங்கள் வாழும் ஒரு அழகான அக்ரஹாரம், மணல் மேடு, மண் வாசனை, கோலங்களுடன் வாசல், திண்ணைவுள்ள ஓட்டு வீடுகள், தெருக் கோடியில் பெரிய கோவில் அங்கிருந்து ஒரு சிறு தொலைவில் நவீனமான மக்கள் புழங்கும் ஐரோப்பா நகரம்.

நாங்கள் கோவிலுக்கு சென்றோம். மிக நல்ல தரிசனம். கோவில் வாசலை அடைந்தால் இன்னும் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.

என் இரண்டாம் சகோதரன் அசோக்தான் அங்கே நிற்கிறான்.

அவன் என்னை பார்த்து “வாடா ஆனந்த் எப்பிடி இருக்கே”

கிட்டத்தட்ட அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்துடன் “நீ எப்போ வந்தே” என்றேன்.

என் சகோதரன் “நான், விஜி, அனிருத் மூவரும் வந்து மூணு நாள் ஆகறது. இந்த கோவில் உத்சவம் பார்க்க வந்தோம் நல்ல வேளை பார்த்தசாரதி கோவில் உத்சவம் முடிஞ்சதுக்கு அப்புறம் இந்த கோவில் உத்சவம் வந்தது சவுரியமா போச்சு, பாட்டியாத்துல தான் தங்கியிருக்கோம்” என்றான்.

”இப்போதாண்டா பாத்தேன்; காபி போட்டுத் தரேன்னு சொன்னா. ராமு பால் வாங்கப் போயிருக்கான், அதுக்குள்ள பெருமாள் சேவிக்க வந்தேன்”

நாங்கள் நால்வரும் அந்த தெருவில் ஒரு வீட்டிற்கு சென்றோம் – யாரோ தெரியவில்லை அனால் நல்ல மனிதர்கள் எங்களுக்கு சாப்பாடு போட்டு இளைப்பாற இடமும் கொடுத்தார்கள். என் பிள்ளைகள் இருவரும் அந்த வீட்டு பிள்ளைகளுடன் விளையாட சென்றனர். நான் உண்ட களைப்பில் சற்று கண் மூடி ரெஸ்ட் எடுத்தேன்.

தூங்கி எழுந்தால் தெருவில் ஒரே கூச்சல் கும்மாளம் நல்ல மாலை பொழுது அமைதியான அக்ரகாரத்தில் மகிழ்ச்சி பொங்கும் சூழல் மிகவும் ரம்யமாக இருந்தது.

நான் சற்று காலார நடந்து செல்ல ஒரு வீட்டு வாசலில் எனக்கு மிகவும் பரிச்சயம் ஆன மாமா ஒருத்தர். மெதுவாக அவரை அணுகி “நீங்களும் வந்திருக்கேளா. உங்கள முன்னால ட்ரிப்ளிகேன்ல பாத்தாப்ல இருக்கு”.

“நான் இந்த ஊருக்கு வந்து பத்து வருஷம் ஆறது” என்றார்.

எனக்கு தெரிந்த இவ்வளவு பேர் இங்க எப்படி ஒரு சேர இந்த ஹங்கேரி அக்ரஹாரத்தில்.

அந்த குழந்தைகள் அக்ரஹார வாழ்கையை, ஐரோப்பா கலாச்சாரத்தில் கலக்காமல் எப்படி சமாளிக்கிறார்கள் என்று புரியாமல் தவித்தேன்.

அந்த தவிப்பின் நடுவே என் செல்ஃபோன் அலாரம் ஒலித்தது.

எழுந்து பார்த்தால் மணி ஏழு. ஆபிஸுக்கு இன்று சீக்கிரம் போகணும் முக்கியமான மீட்டிங்.

ஆனால் கனவில் நினைவு போல் வந்த ஹங்கேரி அக்ரஹாரம் என்னை முழுக்க வியாபித்திருந்தது. நான் இருப்பது துபாய். என் கனவில் ஒரு அக்ரஹாரம் அதுவும் ஐரோப்பா நகரமான புடபெஸ்ட்டில்.

நான் இதுவரை கண்டிராத ஒரு நாடு ஹங்கேரி. அந்த நாட்டில் ஒரு அழகிய அக்ரஹாரம் அமைத்த என் கனவு என்னை நெகிழ வைத்தது. என் கனவில் வந்த என் பாட்டி இந்த உலகை விட்டு பிரிந்து பதினைந்து வருடங்கள் ஆகின்றன.

உண்மையிலேயே வாழ்க்கையில் இது போல் எத்தனை புதையல்கள்.

Life is a treasure!
(உண்மைக் கனவை கண்டதும், விண்டதும்: தி.பா. ஆனந்த், துபாய், ஏப்ரல் 2009)

1 comment:

  1. Lovely! It went like a short story of Sujatha......Please keep writing more such posts in Tamil!

    ReplyDelete